கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் வாகனப் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. அதனால் நிறுத்திவைக்கப்பட வாகனங்கள் பராமரிக்கப்படாததால் அவற்றில் பாம்பு, தேள் உள்ளிட்டவைகள் தங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதற்கு எடுத்துக்காட்டாக நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி செம்மங்குடியில் வசித்துவரும் மதியழகன் என்பவர் ஊரடங்கு உத்தரவால் தனது இருசக்கர வாகனத்தை நீண்ட நாள்களாக நிறுத்தியே வைத்துள்ளார். ஊரடங்கில் தற்போது தளர்வுகள் ஏற்பட்ட நிலையில், நிறுத்திவைக்கப்பட்ட வாகனத்தில் மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பும் போது வாகனத்தின் என்ஜின் இடைவெளியில் பாம்பு வால் தெரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அருகிலிருந்தவர்களின் உதவியுடன் அந்தப் பாம்பினை வெளியில் எடுத்தார். இதுகுறித்து அவர், முன்கூட்டியே வாகனத்தில் பாம்பிருப்பது தெரியவந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக வாகனத்தைப் பயன்படுத்தாதவர்கள், அவ்வப்போது அவற்றை பராமரிக்க வேண்டும். அதேபோல நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தைப் மீண்டும் பயன்படுத்தும் போதும் அவற்றை பரிசோதிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கு 4.0 ஆரம்பம்: தற்போது வரை ரூ. 6 கோடி அபராத வசூல்