டெல்லியில் நடந்த சமய மாநாட்டிற்குச் சென்றுவந்தவர்களில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதிகளைச் சேர்ந்த ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஏழு பேரின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று 47 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதோடு அவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
இதில் முதல்கட்டமாக 16 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை என்று உறுதியானது. மேலும் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கரோனா வார்டுக்கு நேரில் வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்தார்.
இந்நிலையில் கரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு பழங்கள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தார். 16 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவ்ர்களின் வீட்டிற்குச் சென்றனர். தற்போது 31 பேர் கரோனா வார்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ - ஸ்டாலின் காட்டம்