மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தளத்தில் சிவபெருமான் லிங்க வடிவமாகவும், பார்வதி சமேத சிவபெருமானாகவும், அர்த்தநாரீஸ்வரராகவும் மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
சட்டைநாதசுவாமி கோயில் (சீர்காழி பிரம்மபுரீஸ்வரர்) சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறு பெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது நம்பிக்கை.
திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 14வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையையும் கொண்டது.
![சட்டைநாதர் கோவில் பாலாலயம்- தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14241488_n.jpg)
ஞானசம்பந்தர் அவதரித்து ஞானம் பெற்ற இத்தலத்தில் திருப்பணிகள் தொடங்க திட்டமிட்டு நேற்று (ஜனவரி 20) பாலாலயம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூர்ணாஷூதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டுத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
![சட்டைநாதர் கோவில் பாலாலயம்- தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14241488_ngp.jpg)
அதனை தொடர்ந்து யாகத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை எடுத்து சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர் உள்ளிட்ட 31 சுவாமி அம்பாளுக்கு சோமாஸ்கந்தர் சன்னதியில் பாலாலயம் செய்யப்பட்டது.
தருமையாதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பாலாலயத்தில் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறை படி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் சிப்பந்திகள், உபயதாரர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பழனி தைப்பூச திருவிழா - பாரம்பரியம் மிக்க நகரத்தார் காவடிகள் வருகை