நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அடுத்த மாதிரவேளூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. கூலித் தொழிலாளியான இவரது மனைவி உஷா, மகள் விமலா ஆகிய இருவரும் வாய் பேசவும், காது கேட்க முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளாக உஷா வேலை செய்து தனது மகள் திருமணத்திற்காக ரூ.500, 1000 நோட்டுக்களாக மொத்தம் ரூ.35,500 பணத்தை சேமித்துள்ளார். இதுமட்டுமின்றி அந்தப் பணத்துடன் அரைபவுன் தங்கத் தோடு ஆகியவற்றையும் சேர்த்து ஒரு பையில், வீட்டின் பின்புறம் பள்ளம் வெட்டி புதைத்து வைத்துள்ளார்.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதனால் மறைத்து வைத்திருந்த 35,500 ஆயிரம் ரூபாய் செல்லாமல் போனது மாற்றுத்திறனாளிகளான உஷாவுக்கும், விமலாவுக்கும் தெரியவில்லை.
![மாற்றுத்திறனாளி மூதாட்டி உஷா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8072702_us.jpg)
இந்நிலையில், வீடு கட்டும் பணிக்காக ராஜதுரை வீட்டின் பின்புறம் தொழிலாளர்கள் பள்ளம் வெட்டியபோது அங்கு நெகிழி பை ஒன்று சிக்கியது. அதனை வெளியே எடுத்துப் பார்த்தபோது, அதில் மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் அதிகளவு இருந்தன. அதனை எடுத்து எண்ணிப் பார்த்தபோது ரூ.35,500 இருந்ததைக் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து உஷாவிடம் தெரிவித்தனர்.
அதற்கு உஷா, என் மகளின் திருமணத்திற்காக இந்தப் பணத்தை சேர்த்து வைத்துள்ளதாக சைகை மூலம் தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது தொழிலாளர்கள் இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அரசு அறிவித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன எனத் தெரிவித்தனர். இதைக் கேட்டு உஷா, விமலா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
மனமுடைந்த உஷாவிற்கு அந்த ஊர் இளைஞர்கள் முயற்சியால் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை அறிந்து சீர்காழி ரோட்டரி சங்கத்தினர் அந்த மூதாட்டிக்கு 37 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்கியுள்ளனர்.
இந்த தொகை அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று ரோட்டரி சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை அரசிடம் ஒப்படைக்குமாறு ரோட்டரி சங்கத்தினர் அவர்களிடம் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:'பணமதிப்பிழப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல்' - ராகுல் காந்தி