நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு சம்பனோடையை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் சதீஷ்குமார், மணிமாறன் மனைவிக்கு எதிராக போட்டியிட்டார். அதில் மணிமாறன் மனைவி வெற்றி பெற்றுள்ளார். இதிலிருந்து இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் பின்னாளில் தகராறுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று (மே 28) சதீஷ்குமார் அவரது வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது வழிமறித்து மணிமாறன் மற்றும அவரது மகன்கள் அன்பு மாறன், அருண்மாறன் உள்ளிட்டோர் சரமாரியாக அரிவாளால் சதீஷை வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக பாகசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேபோல் ஆச்சாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் பக்கத்து வீட்டில் இருக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் அடிக்கடி வேலி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (மே 28) முத்துக்குமார் மனைவி காமாட்சி மரத்திலிருந்து விழுந்த இலைகளை எரித்துள்ளார். அதிலிருந்து வந்த புகையால் பாதிக்கப்பட்ட முருகன் அவரை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் காமாட்சி, முருகனை பிடித்துக்கொள்ள முத்துகுமார் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த முருகன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கொள்ளிடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீர்காழி பகுதியில் அடுத்தடுத்து 2 பேர் அரிவாளால் வெட்டி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வேகமான வாகனம் ஓட்டியச் சிறுவர்களைக் கண்டித்தவருக்கு அரிவாள் வெட்டு