நாகை : நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 100 விசைப்படகுகள் மற்றும் 450க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாஞ்சூரில் அமைக்கப்பட்ட தனியார் துறைமுகத்தின் காரணத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் 500 மீட்டர் தூரம் வரை கடல்நீர் உட்புகுந்ததால் இதுவரை 40 வீடுகள் 150 தென்னை மரங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. தற்போது வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த மண்டலத்தால் கடலில் 5 அடி உயரத்துக்கு மேல் ஆக்ரோஷமாக அலைகள் சீற்றமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக இன்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டது.
கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.கடல் அரிப்பால் இரவு நேரங்களில் கடல் நீர் உட்புகும் என்ற அச்சத்தால் தூக்கமின்றி உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு தங்களுக்கு கருங்கற்கள் கொட்டி தடுப்பு சுவர் அமைத்து கிராமத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பாதிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், வட்டாட்சியர் பாதிக்கப்பட்ட மீனவ கிராமத்தை பார்வையிட்டார்.
இதையும் படிங்க : சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் சுற்றுச்சூழல் பூங்கா; திறந்துவைத்தார் முதலமைச்சர்!