நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம், நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்தியா முழுவதிலும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தலைவர் தேர்வு
அப்போது, நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் அந்தமானைச் சேர்ந்த ரஞ்சித் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து, செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் தேர்வுசெய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தேசிய பள்ளிகள் விளையாட்டுக் கூட்டமைப்பின் ரஞ்சித் தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டில் அதிக வாய்ப்புகளைக் கொடுப்பதற்கு முயற்சிகள் செய்ய இருக்கிறோம்.
உலக அளவிலான போட்டிகள்
இந்தியாவில் அனைத்து மூலைகளிலும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களின் விளையாட்டுக்காக 200 போட்டிகளை நடத்தி மாநில அளவில் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. உலக அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் நாகையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
பரிசுத் தொகை
இந்திய மாணவர்கள் உலக அளவிலான போட்டிகளில், அதிகம் பங்கு பெறுவதற்காக உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் அதிகப்படுத்தி நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்காக அதிக நிதியை ஒதுக்குகிறது. ரூ.10 கோடி வரை பரிசுத் தொகை வழங்கப்படுகிறது" எனப் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பாரம்பரிய விளையாட்டுகளையும் ஊக்குவிப்போம்' - விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ