கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவினால் பாடங்களை பயிலாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு ஏதுவாக பாடத்திட்டங்களை குறைக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கல்வியாளர் குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவானது பாடத்திட்டங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 1,500 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புக்கு தேவையான பாடப்புத்தக நூல்களை நாகையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ளது.

தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் வரப்பெற்ற பாடப்புத்தகங்கள் அனைத்தும் நாகை மாவட்டத்துக்கு உட்பட்ட 1,500 பள்ளிகளுக்கும் நேற்று (ஜுன் 22) பிரித்து அனுப்பும் பணியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே பாடநூல் திட்டங்களை குறைப்பதற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை குழு அமைத்துள்ள நிலையில், பள்ளி திறப்பதற்கு முன்பே நாகையில் அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளதை கண்டு பெற்றோர்கள் மத்தியில் குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
இதன் விவரம் குறித்து நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனிடம் நமது செய்தியாளர் கேட்டபோது, இந்த புத்தகங்கள் அனைத்தும் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க அனுப்பி வைக்கப்படுவதாக பதில் அளித்தார்.
இதையும் படிங்க... அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்க உத்தரவு