மயிலாடுதுறை: தமிழர்களின் பாரம்பரியமிக்க ஆடி 18ஆம் பெருக்கு விழா நாளை(ஆகஸ்ட் 3) நடைபெற உள்ளது. இந்த பண்டிகையின்போது காவிரி உள்ளிட்ட நீர் நிலைகளில் புதுமணத்தம்பதிகள் மட்டுமின்றி பெரியவர்கள் சிறுவர், சிறுமியர்கள் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவிரி அன்னையை வழிபடுவார்கள். புதுமணத்தம்பதிகள் தாலிக்கயிறு பிரித்து, புதியகயிறு கோர்க்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
காவிரிப்படுகையில் வசிக்கும் சிறுவர்களுக்கு 'ஆடி 18' என்றாலே மனதைக்கவரும் சப்பரம் நினைவிற்கு வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த சப்பரம் தயாரிக்கும் பணி குத்தாலத்தில் நடைபெறுகிறது. இங்கு தயாரிக்கப்படும் சப்பரங்கள் இப்பகுதியில் பிரசித்தம். குத்தாலத்தில் இந்த தொழில் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கியது. தற்போது குத்தாலம் பகுதியில் செல்வம் என்பவர் உள்பட ஒரு சிலரே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளி மரப்பலகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் சப்பரத்தில் வண்ண வண்ண காகிதங்களைக்கொண்டும் தங்களுக்கு பிடித்த தெய்வங்களின் படங்களை ஒட்டியும் தங்களது வீடுகளில் இருந்து காவிரியாறு உள்ளிட்ட அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சிறுவர், சிறுமியர்கள் இழுத்துச்செல்வதில் மிகுந்த ஆனந்தமடைவார்கள்.
பாரம்பரியமிக்க இந்த சப்பரத்தட்டி ஒன்றின் விலை ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை ஆகிறது. பாரம்பரியமிக்க இந்த சப்பரத்தட்டிகளை குத்தாலம் அருகில் உள்ள பகுதியில் பல குடும்பத்தினர் இரவு பகலாகத் தயாரித்து வைக்கின்றனர். இந்த ஆண்டு காவிரி உள்ளிட்ட அதன் கிளை ஆறுகளில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால், வழக்கமான உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:Video: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் யானை; மீட்புப்பணிகள் தீவிரம்