நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூரைச் சேர்ந்த சேகர், திருவிடைக்கழி அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகேய உள்ள பிரவீன்குமார், அருண்ராஜ் ஆகியோர் கனிமவளத் துறை, வருவாய்த் துறையிடம் அனுமதி பெறாமல் தங்களது நஞ்சை நிலத்தில் மண் அள்ளி விற்பனை செய்துள்ளனர்.
இதனைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் சேகரை, பிரவீன்குமார், அருண்ராஜ் ஆகியோர் ஜூலை 29ஆம் தேதி இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த ஆசிரியர் சேகர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவரது மனைவி அபிரமாசுந்தரி, பிரவீன்குமார், அருண்ராஜ் ஆகியோர் மீது பொறையார் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதியாமல் ஜாமினில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், தமிழக நிலம் நீர் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து தனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அவர் அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலரின் கார் டிரைவருக்கு கரோனா