நாகை: புயல் மழை பேரிடர் காலங்களில் கடற்கரையோரம் நிறுத்தப்படும் படகுகள் பாதிப்புக்கு உள்ளாவதால், நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்க கோரி கடந்த 6 நாட்களாக அப்பகுதி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து மீனவர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பிரவீன் பி. நாயர், மீன்வளத்துறை அலுவலர்கள், தாலுகா மீனவர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சாமந்தான்பேட்டையில் விரைவில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் பிரவின் பி. நாயர் உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் தாங்கள் நடத்தி வந்த 6 நாள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுக்கொண்டதோடு, நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவுள்ளனர். இருப்பினும், அரசு அளித்த உத்தரவுபடி மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்படவில்லை எனில் தேர்தலை புறக்கணிப்போம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சுனாமி தினம்! - கடலில் மலர் தூவி அஞ்சலி