நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு முதன்முறையாக ஆர்டிபிசிஆர் கருவி வந்தடைந்தது. தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்தும் முயற்சியாக அதிகளவில் ஆர்டி-பிசிஆர் கருவிகளைச் சுகாதாரத் துறை கொள்முதல் செய்துள்ளது.
இதையடுத்து, கரோனா சிறப்பு வார்டு செயல்படும் மருத்துவமனைகளுக்கு ஆர்டி-பிசிஆர் கருவி அனுப்பிவைக்கப்பட்டுவருகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூ.37 லட்சம் மதிப்புடைய புதிய ஆர்டி-பிசிஆர் கருவி வந்தடைந்தது. கரோனா வார்டில் நிறுவப்பட்டுள்ள இக்கருவியை இயக்குவதற்கான மைக்ரோ பயாலஜிஸ்ட், லேப் டெக்னிசியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஆன்லைன் யுபிஎஸ் கருவி, பரிசோதனைக் கருவி ஆகியவையும் வரவேண்டியுள்ளதால், ஆகஸ்ட் முதல் வாரத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலேயே கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம் தினசரி 150 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படும் என தலைமை மருத்துவர் ராஜசேகர் தெரிவித்தார். இதுவரை மயிலாடுதுறையில் 311 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததில், 260 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.