மயிலாடுதுறை: வெளிநாடுவாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள ஆக்ட் கிரான்ஸ் என்ற அமைப்பு, ரோட்டரி சங்கங்கள் மூலம் இந்தியா முழுவதும் ரூபாய் 300 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை வழங்க முன்வந்துள்ளது. அதன்படி, சென்னை வடக்கு ரோட்டரி சங்கத்தின் முயற்சியால் ஆக்ட் கிரான்ஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
ரோட்டரி சங்கம்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்படவுள்ளன. முதல் கட்டமாக, சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஈரோடு, ஊட்டி, திருப்பூர், உடுமலை, தாராபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை
மயிலாடுதுறை திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமன் முயற்சியின் பேரில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 41 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று (ஜூன்.9) வழங்கப்பட்டன. இந்த விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்று, அரசு மருத்துவமனைமருத்துவ அலுவலர் ராஜசேகரிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கினார். இதில், ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:’அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’- உதயநிதி ஸ்டாலின்