நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியத்தில் செருதூர் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 300 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவருக்குச் சொந்தமான படகில், அதே பகுதியை சேர்ந்த நான்கு மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அப்போது வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் (15 கி.மீ) மைல் தூரத்தில் கடலில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வலையில் ஒரு பெரிய இரும்பு பொருள் ஒன்று சிக்கியது. அந்த இரும்பு பொருளை வலையிலிருந்து எடுத்துக் கொண்டு மீனவர்கள் கரைக்கு வந்தனர்.
பின்னர் இதுகுறித்து மீனவர்கள் வேளாங்கண்ணி கடலோரக் காவல் படை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீனவர் வலையில் சிக்கிய இரும்பு பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மீனவர்கள் வலையில் சிக்கியது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரிய வந்தது. அதனை காவல்துறையினர், வேளாங்கண்ணிக்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சென்னையில் இருந்து, காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தங்கேஸ்வரன், ஜெயராமுடு, காவலர்கள் பரமசிவம், புவியரசு அருண்ராஜா, சுந்தரகுமார் ஆகிய ஏழு பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர் குழுவினர் நேற்று (மே.11) வேளாங்கண்ணிக்கு வந்தனர். பின்னர் கைப்பற்றப்பட்ட ராக்கெட் லாஞ்சரை பார்வையிட்டு, அதை வெடிக்கச் செய்யும் முடிவை எடுத்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் ராக்கெட் லாஞ்சரை அப்பகுதியிலுள்ள கடற்கரைக்கு கொண்டு சென்று பள்ளம் தோண்டி, அதற்குள் ராக்கெட் லாஞ்சரை வைத்து வெடிக்கச் செய்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் பூமியில் இருந்து 10 அடி உயரத்துக்கு மணல் எழுந்தது. இப்பணியின் போது வேளாங்கண்ணி கடலோர காவல் படை ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.