நாகை மாவட்டம் ஒழுகைமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில், கடந்த 25ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள், கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த 7 சிசிடிவி கேமராக்களில் மூன்றின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு காணிக்கைப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொறையாறு காவல் துறையினர் மற்ற சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் சீர்காழி தாலுக்கா மணலகரம் கிராமத்தைச் சேர்ந்த கலையழகன் (60), சீர்காழி கீழ தென்பாதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (59) ஆகிய இருவரையும் காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரைக்காலில் மது அருந்திவிட்டு பேருந்தில் வந்த இருவரும் ஒழுகைமங்கலத்தில் இறங்கி கோயில் அருகே உள்ள மாந்தோப்பில் பதுங்கி இருந்ததும், ஆள்நடமாட்டம் அடங்கிய பின்னர் கோயிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் இணைப்பைத் துண்டித்துவிட்டு உண்டியலை உடைத்து கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈழம் காக்க ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று!