நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரவின் பி. நாயர் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு கைத்தறி, துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார்.
விழாவில் அமைச்சர் ஆயிரத்து 17 பயனாளிகளுக்கு ரூ.6.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமலும் ரஜினியும் அரசியலில் இணைவது குறித்த கேள்விக்கு, "பாலும் மோரும் இணைந்தால் தயிராகும், ஆனால் முறிஞ்ச பாலும் திரிந்த மோரும் இணையும் போது தயிராகாது. இதுபோலத்தான் அவர்களுடைய இணைப்பு" என்றார்.
மேலும் அவர், "முரசொலி அலுவலகம் அமைந்திருப்பது பஞ்சமி நிலமா என்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்குள்ளது, நீதிமன்றத்தின் மூலம் உண்மை வெளிவரும். அதிமுக எப்பொழுதுமே தேர்தலை சந்திக்க தயார். எங்களோடு ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்தால் அவர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்" என்றார். இவ்விழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரஜினி - கமல் அரசியலை விட படத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும் - முத்தரசன்