தமிழ்நாட்டில் பணிபுரிந்த வெளிமாநிலத்தவர்கள் அனைவரும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்த வெளிமாநிலத்தவர்கள், அவர்கள் சொந்த ஊருக்கு இன்று (மே 22) செல்கின்றனர்.
நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் பகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தங்கி, வியாபாரம் செய்து வந்த 33 பேர் கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல், அந்தந்தப் பகுதிகளில் வருவாய்த் துறையினரால் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசு ஊரடங்கில் தளர்வு அறிவித்ததையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில், அவர்கள் 33 பேரும் இரண்டு பள்ளிப் பேருந்துகள் மூலம் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி ரயில் நிலையத்திற்கு மாவட்ட நிர்வாகத்தால் இன்று (மே 22) அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சியிலிருந்து இன்று (மே 22) இரவு ஏழு மணிக்கு ராஜஸ்தான் ரயிலில் அவர்கள் ஊர் திரும்புகின்றனர்.
அதேபோல், தேனி மாவட்டத்தில் செங்கல் சூளை, உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை செய்த ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளர்கள் 24 பேர் இன்று (மே 22) அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேனி மாவட்டத்தில், போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்த இவர்கள், தேனியில் உள்ள தனியார் பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்டனர்.
பின்னர் மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி தலைமையில் 24 பேரும், அரசுப் பேருந்தின் மூலம் திருச்சி அனுப்பப்பட்டு, அங்கிருந்து இன்று (மே 22) இரவு ஏழு மணிக்கு சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல உள்ளனர்.