நாகை: மயிலாடுதுறை மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், ஆறுகள்,வாய்கால்களில் மழைநீர் கரைபுரண்டு ஒடுகிறது. மேலும், வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்து வருகிறது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுக்கா பகுதிகளில் 145 குடிசை வீடுகளும் 17 ஓட்டு வீடுகளும் கனமழையால் இடிந்து சேதமடைந்துள்ளன.
இதில், 3 குடிசை வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. கால்டைகளில், 13 ஆடுகள், 2 மாடுகள், 3 கன்று குட்டிகள் இறந்துள்ளன. சுவர் இடிந்து விழுந்ததில் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் 2 பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே பழவாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் தாழஞ்சேரி வரகடை, திருக்குரக்காவல் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 30 வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 1,500க்கும் மேற்பட்டோர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைவெள்ளத்தால் மயிலாடுதுறை, குத்தாலம், தாலுக்கா பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதையும் படிங்க: திருவையாறில் ஏழு வீடுகள் இடிந்து சேதம்!