புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று (செப்.02) அக்கட்சியின் கூட்டம் மாநிலச் செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசின் கைகூலியாக செயல்பட்டு வருகிறார். இங்கு உள்ள பல திட்டங்களை முடக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்தச் சூழலில் பாஜகவினர் புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதிகார பலத்தாலும், பணபலத்தாலும் இங்குள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைபேசி ஆட்சியைக் கவிழ்க்க முற்படுகின்றனர். இதுபோன்ற ஜனநாயகப் படுகொலையை பாஜக நிகழ்த்தி வருகிறது.
பாஜக மட்டுமின்றி பாஜகவுடன் உறவு கொள்கிற கட்சிகளின் முயற்சியையும் முறியடிக்க, புதுச்சேரியில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கட்சிகள் எல்லாம் இணைந்து போராட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது.
மருத்துவர்கள், செவிலியர் பற்றாக்குறை காரணமாக சரியான நோய்த்தடுப்பு நடவடிக்கை இல்லை. இதனால், உயிர்ச்சேதங்கள் புதுச்சேரியில் அதிகம் நிகழ்ந்துள்ளன. காவல் துறையிலும் 30 விழுக்காடுப் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதனால், காவல் துறையினருக்கு சுமை கூடுகிறது. இதை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 15 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!