விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்காக விவசாயிகளிடமிருந்து அதிகளவு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலம், பொதுமக்களின் இடங்களுக்கு, அரசு சதுர அடிக்கு ஒன்பது ரூபாய் என்ற மிகக் குறைந்த விலை அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளைச் செய்யவிடாமல் தடுத்துநிறுத்தி விவசாயிகளளும் பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இப்பிரச்னை தொடர்பாக டிராபிக் ராமசாமி உள்ளிட்ட ஏராளமானோர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையும் பெற்றதால் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. தற்போது கரோனா ஊரடங்கால் எந்தவித பணியும் நடைபெறாத நிலையில், இன்று (ஜூலை 29) மாலை திடீரென தேசிய நெடுஞ்சாலை துறையினர் தரங்கம்பாடி அருகே எருக்கட்டாஞ்சேரி பகுதியிலுள்ள ஒரு விளைநிலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் எல்லை வரையறைப் பணியை மேற்கொண்டனர். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் ஒன்றுகூடி சம்பவ இடத்திற்குச் சென்று பணியைத் தடுத்துநிறுத்தினர்.