டெல்லி மாநாட்டில் பங்கேற்ற நாகையை சேர்ந்த 5 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் பொரவச்சேரி, நாகூர், யாஹுசைன் பள்ளி தெரு, உள்ளிட்ட 6 வார்டுகள் சீல் வைக்கப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொற்று பரவாமல் இருக்க அந்தப் பகுதிகளுக்குச் செல்லும் 20 க்கும் மேற்பட்ட சாலைகளை காவல்துறையினர் தடுப்புகள், இரும்பு தகரங்கள், மூங்கில் கட்டைகள் கொண்டு அடைத்தனர்.
இதையடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், மருத்துவ குழுவினர் தடைசெய்யப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதி மக்களை சந்தித்த ஆட்சியர், இது தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் மக்கள் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மக்களுக்குத் தேவையான காய்கறிகளை அவர்கள் வீட்டுக்கே கொண்டுவந்து வழங்கும் வசதியை தொங்கி வைத்தார். அதன் பின்னர் பேசிய ஆட்சியர் பிரவீன் பி நாயர், நாகை மாவட்டத்தில் மாநாடு சென்று திரும்பியவர்கள் 31 பேரில் 19 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், 5 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. 14 பேருக்கு நெகட்டிவ். மீதமுள்ள 12 பேரின் முடிவுக்கு காத்திருப்பதாகவும், தொற்றுக்குள்ளானவர்கள் வசித்து வரும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், அரசால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளைத் தவிர, ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் சாலைகளை பொதுமக்கள் சுயமாக அடைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்