தமிழின் முதல் புதினத்தை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. இவர் கிபி 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி திருச்சி அருகேயுள்ள குளத்தூரில் பிறந்தார். மயிலாடுதுறை நீதிபதி, நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்த இவர், தமிழின் முதல் புதினமான பிரதாபமுதலியார் சரித்திர நாவலை எழுதினார். இவரது 193ஆவது பிறந்ததினம் இன்று மயிலாடுதுறையில் தமிழ்ச்சங்கத்தினரால் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கல்லறை தோட்டத்தில் அமைந்துள்ள வேதநாயகம் பிள்ளையின் திருவுருவச் சிலைக்கு தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் வேதநாயகம் பிள்ளையின் நினைவாக மணிமண்டபம் கட்ட வேண்டும், அவரது புதினத்தை தமிழ் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.