மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சோழர் காலத்தில் கட்டப்பட்ட 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு பெரம்பூர் பகுதி மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள கடக்கம், சேத்தூர், கழனிவாசல், மங்கைநல்லூர், எடக்குடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும், கோயில் சிதலமடைந்திருந்த நிலையில், இந்து அறநிலையத்துறை மூலம் திருப்பணிகள் முடிவுற்று கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோயில் திருக்குளம் பக்கவாட்டுச் சுவர்கள், படித்துறைகள் இடிந்து விழுந்தும், சில இடங்களில் விரிசல் அடைந்தும் குளத்தில் இறங்க முடியாத சூழல் இருந்தது.
இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்து அறநிலையத்துறை சார்பில், கோயில் குளத்தைச் சுற்றி பக்கவாட்டுச்சுவர் கட்டும் பணிக்காக இந்து அறநிலையத்துறை சார்பில் 87 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோயில் குளத்தில் பக்கவாட்டுச்சுவர் கட்டுவதற்கு, கோயில் குளத்தில் தோண்டப்பட்ட மண்ணால் கட்டப்பட்டு வருகின்ற நிலையில், கட்டுமானப் பணிக்குத் தேவையான மண்ணை விட குளத்தில் 16 ஆழத்திற்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், இதனை 300 லாரிகள் மூலம் வெளியில் விற்கப்பட்டதாகவும் கூறி பொதுமக்கள் கோயிலுக்குச் சென்று முற்றுகையிட முயன்றுள்ளனர். அப்போது, இதனைக் கண்ட ஜேசிபி ஓட்டுநர் அங்கு இருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, பொதுமக்கள் பெரம்பூர் கடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் மற்றும் பெரம்பூர் போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததன் பேரில், தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பொறையார் - மயிலாடுதுறை சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை பெண்ணின் கருப்பையில் 8 கிலோவில் கட்டி.. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்!