கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவி வயிற்றுவலி காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
நேற்று அவர் பூரண குணமடைந்ததால் சிகிச்சை முடிந்து மருத்துவரின் உரிய அனுமதி பெற்று வீட்டுக்குச் செல்வதற்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுழைவு பகுதியில் தனது கைக்குழந்தையுடன் வாகனத்திற்காகக் காத்திருந்தார். ஊரடங்கு உத்தரவால் சாலைப் போக்குவரத்து முழுவதும் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் தங்கள் ஊருக்குச் செல்ல முடியாமல் தொழிலாளியின் குடும்பத்தினர் கைக்குழந்தையுடன் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அப்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் வழியாகச் சென்ற நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் ஊரடங்கு காலத்தில் ஏன் சாலையில் நிற்கிறீர்கள் எனத் தொழிலாளியிடம் விசாரித்துள்ளார்.
அப்போது நகர ஆய்வாளரிடம் விவரத்தைக் கூறி தனது குடும்பத்தினர் சொந்த ஊர் செல்ல உதவி செய்யுமாறு ஆய்வாளரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதனையடுத்து ஆய்வாளர் ஆனந்தகுமார் மனிதநேயத்தோடு தனது அரசு வாகனத்தில் தொழிலாளியின் குடும்பத்தினரை ஏற்றி பத்திரமாக ஊருக்கு அனுப்பிவைத்தார்.
![தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவிய காவல் ஆய்வாளர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-01-helping-inspector-script-7204630_27042020081836_2704f_1587955716_662.jpg)
தொழிலாளியின் குடும்பத்தினர் ஆய்வாளர் ஆனந்தகுமாருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டனர். இந்த மனித நேயமிக்கச் செயலை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், நாகப்பட்டினம் மாவட்ட காவல் சார்பாகப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், பாதிக்கப்பட்டு நின்ற கூலித்தொழிலாளிக்கு மனித நேயத்தோடு உதவ முன்வந்த நாகை நகர காவல் துறை ஆய்வாளர் ஆனந்தகுமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஹோமியோபதி மருத்துவத் துறை சார்பில் காவல் துறையினருக்கு மாத்திரைகள்