மயிலாடுதுறை: ஊரடங்கு தளர்வின் காரணமாக தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள எழில்மிகு கடற்கரையில் வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை உள்ளது. இந்த கடற்கரைக்கு டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் திரளாக வருவது வழக்கம்.
கரோனா தொற்றால் மார்ச் மாதம் முதல் டேனிஷ் கோட்டை மூடப்பட்டு கடற்கரையில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. இச்சூழலில் ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து 9 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு குடும்பத்தினருடன் வர தொடங்கியுள்ளனர்.
கூட்டம் அதிகமாக வரத்தொடங்கியதால் தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டதோடு, யாரும் கடலில் இறங்கி குளிக்க கூடாது என எச்சரிக்கை பதாகையை வைத்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டேனிஷ் கோட்டையை திறந்து சுற்றுலாப் பயணிகள் பார்வையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.