நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்துள்ள நல்லாடையில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளது. அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரன் என்பவர் அப்பள்ளியில் பயிலும் மாணவிகள், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைமை ஆசிரியரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அதே பள்ளியைச் சேர்ந்த ரூபியா என்ற ஆசிரியை தனது கணவர் சங்கமித்திரனுடன் நாகை மாவட்ட ஆட்சியரிடம் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று புகார் அளித்தார்.
நல்லாடை பள்ளி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று நல்லாடை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாலியல் சம்பவம் புனையப்பட்டது என்றும் தவறான புகார் அளித்த ஆசிரியையின் கணவர் (வழக்கறிஞர்) சங்கமித்திரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அங்கு வந்த நாகூர் காவல் துறையினர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நல்லாடை கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனக் காவல் துறையினர் கூறியதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தை நல்லாடை கிராம மக்கள் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
நல்லாடை பள்ளியில் பாலியல் தொல்லை நடந்ததாக ஒரு தரப்பினரும், பாலியல் தொல்லை இல்லை என மற்றொரு தரப்பினரும் ஒருவர் மாற்றி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.