நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 873ஆக இருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உதவியாளர், நாகையை சேர்ந்த 2 பேர், சீர்காழியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று மருத்துவர்கள், நான்கு கர்ப்பிணிகள் உள்பட 52 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் உதவியாளருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நாள் ஒன்றுக்கு 50 பேர் வீதம் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதனால், மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 917ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த 69 வயதான முதியவர் கடந்த 26ஆம் தேதி காய்ச்சலுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ரத்தம் மற்றும் சளிமாதிரிகள் பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தனியார் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது.