மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவரான பிரியா பெரியசாமி, தன்னை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் ஆகியோர், சாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதோடு, ரோலிங் சேர் வாங்கியதை சாதி ரீதியில் விமர்சித்தும், வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடும் தொகைக்கு கமிஷன் கேட்பதாகவும் குற்றஞ்சாட்டி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கட்கிழமை(ஆக.12) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, மயிலாடுதுறை காவல்துறையினர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்வினையாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமலா ராஜகோபால், தனது டிஜிட்டல் கையெழுத்தை ஊராட்சி மன்ற தலைவர் பிரியா முறைகேடாகப் பயன்படுத்தி செலவு செய்ததாகவும், அதனை மறைப்பதற்காகவே சாதி பாகுபாட்டை காரணம் காட்டுவதாகவும், மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
இந்நிலையில், மன்னம்பந்தல் ஊராட்சியில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட உதவி இயக்குநர் ராஜசேகர் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது ஊராட்சி மன்ற தலைவர் பிரியா, உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துணைத்தலைவர் அமலா கலந்து கொள்ளவில்லை. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விசாரணையின் முடிவில், ஊராட்சி மன்ற தலைவர் டிஜிட்டல் கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தவில்லை என்பது உறுதியானதாக, மாவட்ட உதவி இயக்குநர் தெரிவித்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி, சாதி ரீதியாக தன்னை அவமதித்தது குறித்த விசாரணை நடக்கவில்லை என்றார்.
இதையும் படிங்க: ஊராட்சி மன்றத் துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!