நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா முடிகண்டநல்லூர் காளகஸ்திநாதபுரம், உமையாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கெயில் நிறுவனம் விவசாயிகளிடம் அனுமதி பெறாமல் நிலங்களில் நடவு செய்யப்பட்ட பயிர்களை அழித்து எரிவாயுக் குழாய்களைப் பதித்துவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் முடிகண்டநல்லூர் பகுதியில் விவசாயிகளைச் சந்தித்து கெயில் நிறுவனம் மேற்கொண்டுள்ள பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கெயில் நிறுவனம் ஒப்புதல் வழிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுவருகிறது எனக் குற்றம்சாட்டினார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளிக்க உள்ளனர். குற்றம் செய்த கெயில் நிறுவன அலுவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வேளாண் அலுவலர்கள் கொண்ட உயர்மட்டக் குழு அமைத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார்.
விவசாயிகள் ஒப்புதல் பெற்று குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மறுக்கும் பட்சத்தில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள் பதித்து வருவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.