மயிலாடுதுறை: சீர்காழியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், டெல்லியில் மார்ச் 21 அன்று நடைபெற இருக்கின்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது குறித்தான மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “மயிலாடுதுறை மாவட்டம் வரலாறு காணாத பெருமழையால் பேரழிவை சந்தித்தது. பாதிக்கப்பட்ட கிராமங்களை முழு ஆய்வு செய்து, அதற்கான பேரிடர் நிவாரண இடுபொருள், இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காப்பீட்டு நிறுவனம் மூலம் மேம்படுத்தப்பட்ட காப்பீடு திட்டத்தில், பயிர் பாதிப்பிற்கான இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. தற்போது அதற்கான இழப்பீட்டுத் தொகை வங்கி கணக்குகளில் விவசாயிகள் பெயரில் வரவு வைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
அவ்வாறு வரவு வைக்கப்பட்ட தொகையில், ஏற்கனவே விவசாயிகள் சாகுபடி செய்த நிலப்பரப்பிற்கு ஏற்ப நிதிகள் விடுவிப்பதில் பல்வேறு குளறுபடிகள் தொடர்கிறது. பல கிராமங்களில் விவசாயிகளுக்கு சாகுபடி செய்யும் நிலத்தை குறைத்து தொகை குறைவாகவும், பலருக்கு கூடுதலான தொகையும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக விவசாயிகள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டுகிறார்கள்.
இது குறித்து தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, அரசு கணக்கெடுத்த அடிப்படையில் உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவைப்பது உறுதி செய்ய வேண்டும். பயனாளி பட்டியல்களை வெளிப்படையாக கிராமங்களில் வெளியிட வேண்டும். டெல்டாவில் சம்பா அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், பருவம் மாறி மழை பெய்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு 21 சதவீத ஈரப்பத நெல்லை தடையின்றி கொள்முதல் செய்திட வேண்டும். மத்திய அரசு தேசிய சிறுதானிய ஆண்டாக 2023ஆம் ஆண்டை அறிவித்து, அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகிறது. அதே நேரத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.
பாரம்பரிய வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்க அறிவிப்புகளை வெளியிடும் மத்திய அரசு, அதற்கு முரணாக மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதி வழங்கி வருகிறது. உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையிலும், தீர்ப்பை அவமதிக்கும் நோக்கோடு மரபணு மாற்று விதைக்கு மத்திய அரசு ஆதரவான நடவடிக்கைகளை கொள்கை முடிவாக எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனை கைவிட வேண்டும். மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வேளாண் விரோத சட்டங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் நடவடிக்கை குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
மறுக்கும் பட்சத்தில் மார்ச் 1ஆம் தேதி குமரி தொடங்கி, டெல்லி நோக்கி நீதி கேட்கிற நெடும் பயணத்தை தொடங்க உள்ளோம். மார்ச் 21ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 150 விவசாயிகள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நான் கடவுள்' எனக்கூறிய சாமியாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை.. பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு!