புரெவி புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சேத்தூர், பெரம்பூர், பாலூர் கிராமங்களில் நண்டலாட்டரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் விவசாய நிலங்களுக்கு ஆடு, மாடுகளை ஒட்டிச் செல்லவும், பொதுமக்கள் சென்று வரவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் வெள்ள பாதிப்புகள் குறித்த சேதங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பெரம்பூர் ஊராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் சேத்தூர் மற்றும் பாலூர் கிராமங்களில் வெள்ளத்தால் மூழ்கியுள்ள விவசாயப் பயிர்களையும், அப்பகுதியில் உள்ள பள்ளியில் தண்ணீர் சூழ்ந்துள்ளதையும் பார்வையிட்டார். இதில், சேர்த்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணி, ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணாத்தா (எ) சுரேஷ்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.