மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு, ஆதரவு தெரிவித்து இருதரப்பு மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும், இல்லையென்றால் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்திரத்தில் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேச்சுவார்த்தையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி, கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். பின்னர் தடைகளை மீறி மீன்பிடிக்கும் படகுகள் மீது, மீன்வளத்துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
அப்போது சரியான முறையில் மீன்வளத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என ஆத்திரமடைந்த திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது விசைப்படகுகளில் சுருக்குமடி வலையை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்கச் சென்றனர்.
நான்கு பைபர் படகுகளுக்கு தீ வைப்பு
இதனையறிந்த சுருக்குமடி வலைக்கு எதிரான தரங்கம்பாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், திருமுல்லைவாசல் மீனவர்களை தடுக்க பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்குச் சென்றனர்.
திருமுல்லைவாசல் மீனவர்கள், தங்களது விசைப்படகால் பைபர் படகின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதில் வானகிரி மீனவ கிராமத்தைச் சார்ந்த படகு முற்றிலும் சேதமடைந்து, ராம்குமார், வினோத், சிலம்பரசன் உள்ளிட்ட 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து வானகிரி கிராம மீனவர்கள், பூம்புகார் மீனவர்களுக்குச் சொந்தமான நான்கு பைபர் படகுகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கடலோர காவல் படையினர், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
சுருக்குமடி வலை, படகு பறிமுதல்
இந்நிலையில் மோதலுக்குக் காரணமான படகுகள், விசைப்படகுகளை பறிமுதல் செய்ய, இன்று (ஆக.20) திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
பின்னர் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள சுருக்குமடி வலைகள், ரூ.1 கோடி மதிப்புள்ள படகு ஆகியவை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: கராத்தே சாகசம் செய்த மாணவர் தீயில் கருகிய சோகம்!