மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தில் பூசை குளம் என்றழைக்கப்படும் பொதுக்குளம் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் அருகே உள்ள செல்லியம்மன் கோயில் பூஜை செய்வதற்கும் குளிப்பதற்கும், கால்நடை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் இக்குளத்து நீரைப் பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில் நேற்று (டிச. 31) முதல் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த மீன்களை அப்புறப்படுத்தினர். ஆனால் இன்று (ஜன. 01) காலை மீண்டும் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்துள்ளன.
மேலும் குளத்தில் தண்ணீர் குடித்த ஆடு ஒன்றும் இறந்தவிட்டதாகக் கூறிய கிராம மக்கள் குளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் விஷத்தை கலந்திருக்கலாம் எனவும் எனவே யாரும் குளத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொறையார் காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் குளத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதால் இறந்த மீன்களையும் விஷம் கலந்த குளத்து நீரையும் அப்புறப்படுத்திவிட்டு சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.111 கோடி நிதி ஒதுக்கீடு