மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவி, சென்னையில் தங்கி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். அவருடன் ஒன்றாகப் படித்துவந்த தோழியின் உறவினர் மெல்வின் செல்வக்குமார் என்பவர் மாணவியின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார்.
செல்போன் பேச்சு நட்பாகி, காதல் வலையில் சிறுமி விழுந்துள்ளார். இருவரும் சேர்ந்து பல இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இதற்கிடையே தனது சொந்த ஊருக்கு வந்து பள்ளிப்படிப்பைத் தொடர்ந்த மாணவியிடம் மெல்வின் செல்வகுமார் செல்போனில் தொடர்பில் இருந்து வந்தார்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில், உனது படத்தை அனுப்புமாறு மெல்வின் செல்வகுமார் சிறுமியிடம் வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் தன் கையை கிழித்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட வீடியோ எடுத்து, அதை அந்த சிறுமிக்கு அனுப்பியுள்ளார்.
வீடியோவைக் கண்டு பதறிப்போன சிறுமி, செல்போனில் தன்னை வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார். ஒருகட்டத்தில் மேலாடை இல்லாமல் இருக்கும் வீடியோவை அனுப்பி வைக்குமாறு வற்புறுத்தியதால், அதையும் எடுத்து சிறுமி அனுப்பியுள்ளார். கடந்த வாரம் சிறுமியின் வீட்டிற்குச் சென்ற உறவினர் ஒருவர், சிறுமியின் நிர்வாணப் படங்கள் சமூக வலைதளங்களில் வருகிறது என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்தத் தகவலைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மெல்வின் செல்வக்குமாரை தேடிவருகின்றனர்.