மயிலாடுதுறை அருகே பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் பழனிச்சாமி தலைமையில் 1,500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள் பேரணியாகச் செல்லாதவாறு காவல் துறையினர் பேரிகார்டு, லாரியை குறுக்கே நிறுத்தியும் தடுப்புகளை அமைத்தனர். மேலும் பேரணியாகப் புறப்பட்ட பாமகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போராட்டகாரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையினரின் தடையை மீறி பேரிகார்டு தடுப்புகளை அப்புறப்படுத்தியும் குறுக்கே நிறுத்திவைத்திருந்த லாரி கண்ணாடியையும் சேதப்படுத்தினர். மேலும் பாமகவினர் தங்களைத் தடுக்கக்கூடாது எனக் காவல் துறையினருக்கு எச்சரிக்கைவிடுத்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமகவினரைத் தடுத்துநிறுத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டும் மனு அளிக்குமாறு காவல் துறையினர் அறுவுறுத்தினர். இதன்பின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.