நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், இவரது தம்பி ஆகிய இரு குடும்பங்கள் வயதான பெற்றோர், குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்டங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரஜித் தூண்டுதலின் பேரில் வேட்டங்குடி கிராம பொறுப்பிலுள்ள கணேசன், பாலசுப்பிரமணியன், அப்பாத்துரை உள்ளிட்ட மேலும் சிலர் சரவணன் வீட்டை சுற்றி அவர்கள் பயன்படுத்தி வந்த பாதையினை மதில் சுவர் எழுப்பி அடைத்து, ஊர் மக்கள் யாருமே இவர்களுடன் பழகக் கூடாது என்று தடுத்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்ததைத் தொடர்ந்து சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர், வருவாய் ஆய்வாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பாதை வழங்க ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் புகார் அளித்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி சரவணன், தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளார். மேலும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார்.