நாகை மாவட்டம் தரங்கம்பாடி தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (28). இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் தனது வீட்டருகே, குமார் என்பவருக்குச் சொந்தமான டிராக்டர் மோதியதில் தலை, இடுப்பு, கால்களில் படுகாயம் ஏற்பட்டு படுத்தபடுக்கையானார்.
விபத்து குறித்து, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பொறையாறு காவல் துறையினர் புகாரினைப் பெற்றுள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் மீது சுமார் நான்கு மாதங்கள் கடந்த நிலையில் வழக்குப் பதியவில்லை என கூறப்படுகிறது. தமிழ்செல்வனால் எழுந்து நடமாட முடியாத நிலையில் மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குணமாகாததால் உடலில் படுக்கைப்புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
அதனால் அவரது உறவினர் சித்ரா என்பவர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தமிழ்செல்வனை ஆம்புலன்சில் அழைத்து வந்து விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்யக் கோரி கோட்டாட்சியர் மகாராணியிடம் புகார் மனு அளித்தார்.
விபத்து நடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகும் விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யாத காவல்துறையினரின் செயல் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க:பிரதமர் மோடி கடுமையாக உழைக்கிறார் - ஓ.பி.ஆர்.