2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்தனர். அந்த தாக்குதலில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரின் மனதிலும் நீங்கா வடுவாக அமைந்தது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
திருவள்ளூர்
காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக திருவள்ளூர் பாஜக சார்பில் வீரவணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
திருவள்ளூர் பாஜக நகர செயலாளர் சதீஷ் தலைமையில், காமராஜர் சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு இறந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து காவலர்களும் பொதுமக்களும் ராணுவ வீரர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
இதையும் படிங்க: ரயில்வே வாரியத் தலைவரிடம் மனு அளித்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசன்