மயிலாடுதுறை: பனை மரத்தில் இருக்கும் நஞ்சுமிகுந்த வண்டின் கூட்டை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கதண்டு என்ற கொடிய நஞ்சுள்ள வண்டு அதிகளவில் காட்டுப் பகுதியில் காணப்படும். காடுகள் அழிக்கப்பட்டு வருவதால், ஊருக்குள் இருக்கும் பனை மரங்கள், தென்னை மரங்களில் இவை கூடுகட்டி வசித்து வருகிறது. இந்த கொடிய நஞ்சு வண்டு கூட்டமாக வந்து தாக்கும்.
ஒருவரை நான்குக்கும் மேற்பட்ட கதண்டுகள் கடித்தால், உயிர்பிழைப்பது கடினம். தலையில் கடித்தால் நஞ்சு உடனடியாக மூளையைத் தாக்கி, சிறுநீரகத்தை பாதிப்படைய செய்யும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். மேலும், சிறு குழந்தைகளை இரண்டு வண்டுகள் கடித்தாலே உயிர் இழக்க நேரிடும்.
இந்த கூட்டு வண்டுகள் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் மடப்புரம் கிராமத்தில் தரங்கம்பாடி செல்லும் சாலையோரத்திலுள்ள பனைமரத்தில் அதிகளவில் உள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார், அவரது மகள் இன்சிகா ஆகிய இருவரும் கதண்டு வண்டு தாக்கி உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. உடனடியாக பொதுமக்களின் நலன் கருதி தீயணைப்புத் துறையினர் கதண்டு வண்டுகள் அழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.