மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜை விழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும் வைகாசி மாத்தில் 11 நாட்கள் கொண்டாடப்படும்.
இதில் 11ஆம் திருநாள் அன்று, ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இந்த விழாவில், குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கிச் சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டணப்பிரவேசமாக வலம் வருவர்.
இந்த நிலையில், மனிதனை மனிதன் தூக்கிச் செல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் பல்லக்கு தூக்கும் (பட்டணப்பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை அப்போதைய கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடை விதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதலமைச்சரை சந்தித்து பட்டணப்பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்த நிலையில், பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணை பிறப்பித்தார்.
முன்னதாக, பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையில், டிஐஜி தலைமையில் 2 எஸ்பிக்கள் உள்பட 600க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், பல்வேறு தடைகளைக் கடந்து பட்டணப்பிரவேசம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
அதில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபரணங்கள் அணிந்து கொண்டு, திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ பல்லக்கில் வந்தார். தொடர்ந்து பக்தர்கள் பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமை தலைமையில், 70 பேர் தோளில் சுமந்த ஆதீனத்தைச் சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்தனர்.
இந்த விழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா, பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு, ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு வைகாசி பெருவிழாவானது, கடந்த மே 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்வான பட்டணப்பிரவேசம், இந்த மாதம் ஜூன் 10ஆம் தேதியான நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் பட்டணப்பிரவேச திருவிழாவில் மனிதனை மனிதன் சுமந்து செல்வது மனித உரிமை மீறல் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் ஆகிய கட்சி மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தராத நிலையில், தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பட்டணப்பிரவேசம் மேற்கொள்ளும் தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக தடைவிதிக்கக் கோரியும் முழக்கமிட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த மயிலாடுதுறை காவல் துறையினர், குத்தாலத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
மேலும், பட்டணப்பிரவேச நிகழ்வுக்கு எதிர்ப்பு உள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஏடிஎஸ்பிக்கள், 7 டிஎஸ்பிக்கள், 14 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 360க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், இரவு பட்டணப்பிரவேச விழா தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தங்க ருத்ராட்சை, திருஆபரணங்கள் பூண்டு, தங்க கொறடு பாதரட்சை அணிந்து, ஆதீனத் தம்பிரான்கள் மற்றும் திருக்கூட்ட அடியவர்கள் புடை சூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.
தொடர்ந்து, பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து சென்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வர மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புலியாட்டாம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வானவேடிக்கை என ஆராவாரத்துடன் சிவனடியார்கள், பக்கதர்கள் புடை சூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.
ஆதீனமடத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில், பூரண கும்ப மரியாதையுடன் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளித்து, தீபாராதனை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கி திருநீறு பிரசாதமாக வழங்கினார்.
பட்டணப்பிரவேச பெருவிழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், திருப்பனந்தாள் இளவரசு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். வீதியுலா முடிவடைந்து ஆதீன குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் ஆதீனகர்த்தர் எழுந்தருளி பாவனாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார்.
இதையும் படிங்க: Pattanapravesham:தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம்; ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது