மாம்பழங்களில் மல்கோவா, இமாம்பசந்த், அல்போன்சா, ருமானியா என பல்வேறு இனங்கள் உள்ளன. இருந்தாலும், மற்ற மாங்கனிகளில் இல்லாத வகையில் சுவையும், மணமும், பாதிரி மாம்பழத்திற்கு மிகவும் அதிகமாகும்.
பாதிரி மாம்பழம் பெயர் காரணம் என்ன?
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சுவிசேஷ லுத்ரன் திருச்சபையில் பாதிரியாராக கல்விப்பணி, மதப்பரப்புரைக்காக 1847ஆம் ஆண்டு பணியாற்றியவர் பாதிரியார் ஓக்ஸ். ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார் ஓக்சும், அவருடைய மனைவி சாரல் என்பவரும், தோட்டக்கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இவர் பணியாற்றிய, சர்ச் வளாகத்தில் முதலில் 1847ஆம் ஆண்டு பாதிரியார் ஓக்ஸ் தனது மனைவியுடன் இணைந்து, ஒரு மாங்கன்றை ஒட்டு முறையில் உருவாக்கினார். அந்த மரத்தில் காய்த்த மாங்கனி நறுமனமும் சுவையுடன் இருந்தது. இதனை பாதிரியார் பொதுமக்களுக்கு கொடுக்கவே இந்த மாம்பழத்தை கிறிஸ்துவ பாதிரியார் உருவாக்கியதால், பாதிரி மாம்பழம் என்று பெயர்பெற்றது.
அப்படி என்னதான் இருக்கு பாதிரி மாம்பழத்தில்...!
மற்ற மாம்பழங்கள், காய்பருவத்தில் ஒரு வகையான புளிப்பு சுவையும், செங்காயில் ஒருவித புளிப்பு கலந்த இனிப்பு சுவையும், பழத்தில் இனிப்பு சுவையும் இருக்கும். ஆனால் பாதிரி மாம்பழம், காய், செங்காய் பருவத்தில், வாயில் வைக்க முடியாத அளவில் அதி பயங்கர புளிப்பு சுவையும், பழமான பின் அதிகமான இனிப்பு சுவையும் காணப்படும். அது மட்டுமின்றி, பாதிரி மாம்பழத்திற்கு என்று தனியான மணமும் அதன் சுவையை அதிகரிக்க ஒரு காரணமாகும்.
மாம்பழங்களின் ராணி பாதிரி மாம்பழமா?
ஒரு மூடப்பட்ட அறையிலோ, பீரோவிலோ பாதிரி மாம்பழத்தை வைத்து எடுத்தால், பலநாட்கள் வரையில் நறுமணம் வீசும் இயல்பு கொண்டது. இதனால் இது மாம்பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகின்றது.
மற்ற மாங்கனிகளில் இல்லாத ஒரு சிறப்பும் பாதிரி மாம்பழத்திற்கு உண்டு. மற்ற மாங்கனிகள் நாள் ஆகிப்போனால் அழுகிப்போகும். ஆனால் நாள் ஆக, நாள் ஆக பாதிரி மாம்பழம் அழுகாது. வயதான மனிதர்களுக்கு தோல் சுருங்குவது போல் பாதிரி மாங்கனியின் தோல் சுருங்கி, சுரு, சுருவென்ற சுவைக்கு மாறும்.
பாதிரி மாம்பழம் மாமரம் என்ன ஆனது?
பாதிரியாரால் உருவாக்கப்பட்டதால், பாதிரி மாம்பழம் என்று அழைக்கப்படுகிறது. முதல் மரம் 1972ஆம் ஆண்டு வீசிய புயலில், விழுந்துவிட்டது. அதிலிருந்து ஒட்டு போடப்பட்ட பாதிரி மாமரங்கள் இன்றும் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சரி தற்போது பாதிரி மாம்பழத்தின் உற்பத்தியாளர்கள் பாதிப்பு அடைகின்றனரா?
வெளிநாடுகளில் வேலை செய்யும் உறவினர்களுக்கு இங்கிருந்து பலர் பாதிரி மாம்பழங்களை வாங்கி அனுப்புவது வாடிக்கையான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவால் உறவினர்களுக்கோ அல்லது விலைக்கோ ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அதனால், தற்போது பாதிரி மாம்பழத்தில் விலை சரிந்துள்ளது.
முன்பெல்லாம் ஒரு கிலோ பாதிரி மாம்பழம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் தற்போது 70 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், வெளிநாடு, வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளதாகவும் வியாபாரிகள், நுகர்வோர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க...ஆடி மாத உழவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்!