நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் கொள்ளிடம், கொண்டல், செம்மங்குடி, எருக்கூர், திருவெண்காடு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30,000 ஏக்கருக்கு குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சம்பா சாகுபடி பொய்த்துப்போன நிலையில், விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர்.
ஆள் பற்றாக்குறை, மின்சார தட்டுப்பாடு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு ஆகியவற்றையும் கடந்து விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். இதனிடையே, குறுவை சாகுபடி செழிப்பாக வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்துள்ளன. வீட்டிலும், கலத்துமேட்டிலும் வைப்பட்டுள்ள நெற்கள், மழையில் நனைந்து முளைக்க தொடங்கியதால், இதை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மேலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால், வாடகைக்கு தார்பாய் வாங்கி விளைந்த நெல்லை வெயிலில் காயவைத்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் வைத்துள்ள நெல்லை தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதாகவும், தங்களை அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.