கரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உணவு உற்பத்திக்கு அடிப்படையான விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்களித்துள்ளது. இருப்பினும், உற்பத்தி செய்த விளை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வதிலும், கொள்முதல் செய்வதிலும் ஏற்பட்டுள்ள சிக்கல் விவசாயிகளைப் பெரும் கவலையடையச் செய்துள்ளது.
குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் விளைந்து அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் தேக்கமடைந்துள்ளன.
விவசாயிகளிடமிருந்து அவர்கள் விளைவித்த விளை வேளாண் பொருள்களை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழகம் சார்பில் கொள்வனவு செய்யும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் ஆலங்கோட்டை, அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக நெல்லை வீதியில் கொட்டி வைத்து காத்திருக்கின்றனர்.
இன்னும் ஒரு சில நாட்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் சூழ்நிலையில் விவசாயிகள் மழையினால் நெல் பாதிக்கப்படும் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நெல்லானது, வெயிலிலும் பனியிலும் காய்ந்து தரம் குறைந்துவிடும் அபாயமும் இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும்.
நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் போதிய தொழிலாளர்கள் இல்லாததாலும், லாரிகள் இயங்காததாலும், பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை கொள்முதல் செய்தால்தான் அடுத்ததாக அறுவைக்கு காத்திருக்கும் நெல்லினை அறுவடை செய்ய முடியும் என்பதால் உடனடியாக நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு எடுத்துச் செல்ல துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : 'அன்னாசி பழங்களை அரசே நேரடிக் கொள்முதல் செய்ய வேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை