மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி பாலமுருகன். இவர் பொறியியல் பட்டதாரி ஆவார்.
இயற்கை ஆர்வலரான இவர் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் நஞ்சில்லா பாரம்பரிய நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சிலி சம்பா, தூயமல்லி, கறுப்புக்கவுனி போன்ற ரகங்களை விளைவிக்க விரும்பினார்.
பொதுவாக வயலில் நீர் பாய்ச்சி, உழவடித்து, நிலத்தைச் சமன்படுத்தி, மேட்டுப்பாத்தி அமைத்து நாற்றங்கால் வளர்ப்பார்கள்.
ஆனால், பாலமுருகன் இதிலிருந்து சற்று வேறுபட்டு, தனது வீட்டு மாடியிலேயே நாற்றங்கால் வளர்ப்பது குறித்து யோசித்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார்.
சேறில்லா விவசாய முறை
முதற்கட்டமாக ஒன்றரை ஏக்கருக்கான ஆத்தூர் கிச்சிலி சம்பா, ஒன்றரை ஏக்கருக்கான தூயமல்லி நாற்றங்கால்களை தன் வீட்டு மாடியிலேயே உருவாக்கியுள்ளார்.
சேறில்லா விவசாய முறையாக முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயந்திர நடவுக்கான நாற்றுக்களை சேறுக்குப் பதிலாக கருக்காய், தேங்காய் நார், கழிவு உரம், மரத்தூள் போன்றவற்றைக் கொண்டு ட்ரேயில் நெல் விதைகளைக்கொண்டு, பரப்பி நாற்றுக்களை உருவாக்கியுள்ளார்.
நாற்றுகளுக்குத் தேவையான நீரை பூவாளி வைத்து பாய்ச்சுகிறார். இதனால் 17 நாள்களில் நாற்றின் வேர்ப் பகுதி சேதமாகாமல், சேறும் சகதியும் இல்லாமல் அப்படியே எடுத்து சுருட்டி நடவுக்கு அனுப்புகிறார். வயலில் நட்டால் நாற்றுகள், மழையில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் இவருக்கு இல்லை.
பாரம்பரிய ரகங்களை காக்கும் முயற்சி
அதுமட்டுமின்றி, வயலில் நாற்றங்கால் விடுவதைவிட இதற்கு குறைந்த செலவே ஆகிறது. இதற்காக கலப்பில்லா, முளைப்புத்திறன் அதிகமுள்ள நெல் ரகங்களை வீரசோழன் உழவன் உற்பத்தி நிறுவனம், ஐசிஐசிஐ பவுண்டேஷனுடன் இணைந்து வழங்கிவருகிறது.
பாரம்பரிய நெல் ரகங்களைப் பரவலாக்கம் செய்யும் முனைப்புடன், நெல்லை வழங்கி வரும் இவர்கள், அதனை விலைக்கு தருவதற்குப் பதிலாக, தரும் விதை நெல்லைவிட இரண்டு மடங்காக திரும்பப் பெற்று பாரம்பரிய ரகங்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஐசிஐசிஐ பவுண்டேஷன் இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று டன் விதை நெல்லை வழங்கியுள்ள நிலையில், விவசாயி பாலமுருகன் மட்டுமே அதனை மாடியில் வளர்த்து பலனும் கண்டுள்ளார்.
இவரது செயல்பாடுகளை வேளாண் ஆர்வலர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். மேலும் தன்னைப் போன்று படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் அழிந்து வரும் விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பொள்ளாச்சி வழக்கில் எஸ்.ஐ., உள்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட்!