மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, சேத்தூர் கிராமம் மிகவும் தாழ்வான பகுதி. இங்கு ஆண்டுதோறும் 1,500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் தற்போது 1,200 ஏக்கரில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 300 ஏக்கரிலும் நடவு செய்வதற்காக பாய்நாற்றங்கால் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், நடவு செய்யப்பட்டு 20 நாள்களான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வடிகால், மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வடிய வழியில்லாத நிலையில், ஏரி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வாய்க்காலில் செல்லும் மழைவெள்ளநீர் முழுமையாக வயல்வெளியில் பாய்ந்து வருகிறது. இதனால் ஏற்ககெவே நீரில் மூழ்கியுள்ள இளம் பயிர்கள் முழுவதுமாக அழுகி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கிராம குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளநீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக கிராம குடியிருப்புப் பகுதிக்குள் நீர் உட்புகும்முன் வாய்க்கால் உடைப்பை சரி செய்து தூர்வாரப்படாத வாய்க்கால்களை, போர்க்கால அடிப்படையில் தூர்வாரினால் மட்டுமே தங்கள் கிராமத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்க முடியும் என்று விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்கள் பார்வைக்கு ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வு மாதிரிகள்!