மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் வவ்வாலடியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன பேரணியான சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவ்வாலடியில் தொடங்கிய பேரணியானது கேதாரிமங்கலத்தில் முடிவடைந்தது. 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இப்பேரணியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரியும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனிடையே, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வவ்வாலடி, ஏனங்குடி, ஆதலையூர், காரப்பாக்கம், வடகரை நடுக்கடை, கொந்தை உள்ளிட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து இஸ்லாமியர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.