நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சேத்தூர் ஊராட்சி உக்கடை விளாகம் கிராமத்தில் திருவிடைமருதூரை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், மீன்கள் வளர்ப்பதற்கு அனுமதி பெற்று ஆறு குட்டைகள் அமைத்து மீன் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (12.08.20) அதிகாலை வேதாரண்யத்தில் இருந்து உப்பு ஏற்றி வந்த லாரி உக்கடை கிராமத்தில் வயல் பகுதி சாலையில் செல்லும் போது வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையறிந்த விவசாயிகள் அங்கு சென்று பார்த்த போது வயலில் உப்பு மூட்டைகள் சரிந்து கிடந்தது. பின்னர் அங்குள்ள மீன் குட்டைகளை இறால் குட்டைகளாக மாற்றுவதற்காக வேதாரண்யத்தில் இருந்து லாரியில் உப்பைக் கொண்டு வந்து, மீன் குட்டையில் உள்ள தண்ணீரை, உப்பு தண்ணீராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து விவசாயிகள் குட்டையில் இருந்த பொருள்களை அப்புறப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீன் குட்டைகளை உப்பு நீராக மாற்றி அமைத்தால் விளைநிலங்கள் உப்பு நீராக மாறி விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறிய விவசாயிகள், உடனே அதனை அமைப்பதற்கு தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் அறிந்து வந்த தரங்கம்பாடி தாசில்தார் கோமதி, விவசாயிகளிடம் நடவடிக்கை எடுப்பதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பழனிசாமி தலைமையிலேயே அதிமுக களம் காணும் - ஆர்.பி.உதயகுமார்