நாகப்பட்டினம்: திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பரம் ஊர்வலம் (ஏப். 29) நடைபெற்றது. சப்பரம், தெற்கு வீதியில் திரும்பி 10 மீட்டர் தூரம் வரை சென்றுள்ளது. அப்போது, திடீரென சப்பரம் சாய்ந்ததில், அங்கு சப்பரத்திற்கு முட்டுக்கட்டைபோட்டுக் கொண்டிருந்த தீபராஜன் (27) என்ற தொழிலாளி (அதே பகுதியைச் சேர்ந்தவர்) சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார்.
மேலும், சப்பரம் அவரின் வயிற்றில் ஏறியதால் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் திருமருகலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தளங்களில் தேர், சப்பரங்கள் இழுக்க முறையான அனுமதி பெற வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, உத்திராபதிஸ்வரர் கோயில் நிர்வாகிகள் திருமருகல் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் முறையான அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இரவு 11.50 மணிக்கு புறப்பட்ட உத்திராபதிஸ்வரர் சுவாமி சப்பரம் தெற்கு வீதி திரும்பும்போது, இரவு 12.35 மணிக்கு விபத்துக்குள்ளாகி உள்ளது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக தீபராஜனின் உடல் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருக்கண்ணபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த தீபராஜன் குடும்பத்தினர் காலங்காலமாக முட்டுக்கட்டை போடும் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உயிரிழந்த தொழிலாளி தீபராஜன் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.