மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வாணகரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த தூண்டிக்காரன் (55), அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் (60) ஆகிய இருவரும் சமுதாய கூடத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நேற்று(பிப்.19) பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதனைக்கண்ட, ராஜின் அண்ணன் மகன் பாக்யராஜ், இருவரின் சண்டையை தடுத்து அவர்கள் இருவரையும் பிரித்து தள்ளியுள்ளார். இதில், கீழே விழுந்ததில் தூண்டிக்காரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்தவர்கள் தூண்டிக்காரனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பூம்புகார் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து ராஜ்(60), பாக்யராஜ்(35) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காசோலையை திருத்தி நூதன மோசடி; ஊராட்சி ஒன்றிய கணக்கர் மீது வழக்கு பதிவு