தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக நிதி வழங்க பொதுமக்களுக்கு சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, நாகப்பட்டினம் ஆலத்தூரை அடுத்த அருள்மொழித்தேவன் மேலத்தெருவைச் சேர்ந்த சந்திரா (70), தனது முதியோர் உதவித்தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
இவரது கணவர் கூடலிங்கம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இத்தம்பதியிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் மூதாட்டி சந்திரா தனித்து வசித்துவருகிறார். இவருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 5 கிலோ அரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தன்னிடம் மிகுந்த பொருள் இல்லாத நிலையிலும், தமிழ்நாடு மக்களின் இன்னலான நேரத்தில் மூதாட்டி உதவ நினைத்தார்.
இதையடுத்து, ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியத்தை சந்தித்து தனது ஒரு மாத உதவித்தொகையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு இதற்காக அனுமதி கோரியுள்ளார். இதனிடையே இன்று ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சந்திராவை அழைத்து வந்தார்.
அப்போது இந்த மாதம் தனக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயும், 5 கிலோ அரிசியும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயரிடம் மூதாட்டி சந்திரா வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அரிசியை மூதாட்டியிடமே திரும்ப வழங்கி பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார். மூதாட்டிக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் நம்பிக்கை தெரிவித்தார். அதனைப் பெற்றுக்கொண்ட மூதாட்டி சந்திரா மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். வசதி படைத்தவர்களே உதவி செய்ய முன்வராத நிலையில், தனக்கு வாழ்வாதாரமான ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய மூதாட்டியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிசீலினை!